தட்டார்மடம் வியாபாரி கொலையில் மேலும் 2 பேர் கைது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-08 00:12 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பை சேர்ந்த வியாபாரி செல்வன் (வயது 32), நிலத்தகராறு காரணமாக காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது திசையன்விளை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சரண் அடைந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் மற்றும் கைதான திருமணவேலின் உறவினர்களான முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகிய 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்களை சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வீடியோவில் பதிவு செய்தனர்.

செல்வன் கொலைக்கு பயன்படுத்திய காரை தச்சன்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்து விட்டு, அதன் நம்பர் பிளேட்டை உடைத்து அருகில் உள்ள குப்பைமேட்டில் வீசி சென்று உள்ளனர். அந்த நம்பர் பிளேட்டையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீட்டனர். பின்னர் திருமணவேல் உள்ளிட்ட 4 பேரையும் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் வருகிற 19-ந்தேதி வரையிலும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார். பின்னர் திருமணவேல் உள்ளிட்ட 4 பேரையும் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

மேலும் 2 பேர் கைது

இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தட்டார்மடம் அருகே புத்தன்தருவையைச் சேர்ந்த பேச்சி (43), தாமரைமொழியைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன் (48) ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்கண்ணா, கிராம உதவியாளர் குமாரலிங்கம் ஆகியோர் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதில் மேலும் பல தகவல்கள் கிடைத்தன. வியாபாரி செல்வனுக்கும், திருமணவேலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினரும் போலீசில் புகார் தெரிவித்து வந்து உள்ளனர். திருமணவேல் அளித்த புகாரின்பேரில், செல்வன் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் திருமணவேல், தனது புகார் மீது உரிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்படவில்லை என்று கடந்த 31.08.2020 அன்று போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தாராம்.

சதி திட்டம்

தொடர்ந்து செல்வன், திருமணவேலின் தோட்டத்தை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருமணவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செல்வனை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். மேலும் செல்வன் மீண்டும் தோட்டத்துக்கு வந்தால், அவரை கண்டுபிடிக்கும் வகையில் தோட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி, அங்கு பதிவாகும் காட்சிகளை நேரடியாக திருமணவேல் செல்போனில் பார்க்கும் வகையில் இணைப்பு கொடுத்து வைத்து இருந்தார்.

சம்பவத்தன்று முத்துராமலிங்கம் காரை ஓட்டிச் செல்ல, அந்த காரில் திருமணவேல், சின்னத்துரை, பேச்சி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் செல்வனை காரில் கடத்தி சென்று தாக்கி கொலை செய்து வீசிவிட்டு தப்பி சென்று உள்ளனர். பின்னர் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை தச்சன்விளை பகுதியில் உறவினர் வீட்டில் மறைத்து விட்டு சென்னைக்கு சென்றது சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கைதான பேச்சி, கருப்பசாமி பாண்டியன் ஆகிய 2 பேரையும், கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்பாடு செய்தனர்.

மேலும் செய்திகள்