கோபி அருகே ஒரு தலைக்காதலால் பயங்கரம் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெண் வெட்டிக்கொலை வாலிபர் பிடிபட்டார்

கோபி அருகே மகளை திருமணம் செய்துகொடுக்க மறுத்த பெண்ணை, வெட்டிக்கொன்ற வாலிபர் போலீசாரிடம் பிடிபட்டார்.

Update: 2020-10-08 00:40 GMT
கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரிய மொடச்சூர் சங்கரன் வீதியைச் சேர்ந்தவர் மேரி (வயது 56). இவருடைய கணவர் தமிழ்தாசன். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். முதல் மகள் அன்னமேரிக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்ற 4 மகள்களுக்கும் திருமணம் ஆகவில்லை.

மேரி ரெடிமேட் ஜவுளி மற்றும் பேன்சி பொருட்களை தன்னுடைய வீட்டிற்கு முன்பாக தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்தார்.

ஒருதலைக்காதல்

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோபியை அடுத்துள்ள ஒத்தக்குதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் அருகில் மேரி தனது 4 மகள்களுடன் குடியிருந்து வந்தார். அப்போது அதேபகுதியில் குடியிருந்த பர்கூரைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் என்பவர் மேரியின் கடைசி மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி அவர் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு மேரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த முருகன் உன் மகளை எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் யாரும் உயிரோடு இருக்க முடியாது எனசெல்போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் முருகனுக்கு பயந்து கோபி பெரியமொடச்சூர் சங்கரன் வீதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேரி தனது மகள்களுடன் குடிவந்து விட்டார்.

சரமாரி வெட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேரி தனது மருமகன் புஷ்பராஜ், மகள் அன்னமேரி ஆகியோருடன் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் முருகன் அங்கு வந்தார். பின்னர் தான் கொண்டுவந்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மேரியின் அருகே சென்று உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறாயா? என ஆவேசத்துடன் கூறி அரிவாளால் மேரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதைத் தடுக்க வந்த கணேசன் என்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை போலீசாருடன் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில் மேரி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தியூர், பர்கூர் மலை கிராமங்களில் தனிப்படை போலீசார் தப்பியோடிய முருகனை வலைவீசி தேடி வந்தனர்.

வாலிபர் பிடிபட்டார்

இதற்கிடையே பர்கூர் மலைக்கிராமத்தில் தட்டக்கரை வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது அந்த வாலிபர், தான் கோபியில் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டு வந்து பதுங்கியிருப்பதை ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அந்தியூர் போலீசார் அவரை பிடித்து கோபி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோபி போலீசார் அவரிடம் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒருதலைக்காதலால் பெண்ணை வாலிபர் ஒருவர் வெட்டிக்கொன்றது கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்