விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - விதை பரிசோதனை அலுவலர் தகவல்

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என விதை பரிசோதனை அலுவலர் கணேசன் கூறினார்.

Update: 2020-10-07 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் கோவை சரக விதை பரிசோதனை அலுவலர் கணேசன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சான்று விதை மாதிரிகள், ஆய்வு விதை மாதிரிகள், அதன் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியன கணக்கிடப்படும் முறைகள் மற்றும் பெறப்படும் மாதிரிகள் உரிய காலத்தில் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் தாமதமின்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் விவசாயிகள் விதை சான்றுத்துறை மற்றும் விதை ஆய்வு துறைகள் மூலம் பெறப்படும் விதை மாதிரிகள், ஸ்பெக்ஸ் இணையதள பதிவேற்றம், புறத்தூய்மை ஆய்வு, பிற ரக கலப்பு சோதனை ஆய்வு, விதைகளின் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறன் ஆய்வுகள் மேற்கொள்வதை கண்காணித்து அறிவுரைகள் வழங்கினார்.

விதை முளைப்பு திறன் அறையில் கடைபிடிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், ஒளி அளவு மற்றும் முளைப்புத்திறன் சோதனை நாற்றுக்களின் வளர்ச்சி ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

பணி விதை மாதிரிகள் தரத்தினை துல்லியமாக ஆய்வு செய்து முடிவுகளை வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெற தரமான விதையை அறிந்து பயிர் சாகுபடி செய்யலாம். மேலும் தங்களிடமுள்ள விதைகளின் தரத்தை அறிய பணிவிதை மாதிரிக்கு ரூ.30 கட்டணத்தை செலுத்தி விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்து கொள்ளலாம் என கூறினார்.

ஆய்வின்போது திருவாரூர் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் புவனேஸ்வரி உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்