பெரியதாழையில் கடல் அரிப்பு: தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை

பெரியதாழையில் கடல் அரிப்பு ஏற்பட்டது. எனவே அங்கு தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-10-08 19:00 GMT
தட்டார்மடம்,

தட்டார்மடம் அருகே பெரியதாழையில் 400-க்கு மேற்பட்ட நாட்டுப்படகுகளில் சென்று மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டதால், ரூ.25 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. அப்போது ஊரின் கிழக்கு பகுதியில் 200 மீட்டர் தூரமும், மேற்கு பகுதியில் 800 மீட்டர் தூரமும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.

கிழக்கு பகுதியில் குறைவான தூரமே தூண்டில் வளைவு அமைக்கப்பட்டதால், அங்கு தொடர்ந்து கடலரிப்பு ஏற்படுகிறது.

இதையடுத்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, பெரியதாழையில் ரூ.30 கோடி செலவில் தூண்டில் வளைவை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் இதுவரையிலும் பணிகள் தொடங்கப்படவில்லை.

தூண்டில் வளைவை நீட்டிக்க...

இந்த நிலையில் பெரியதாழையில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு கிழக்கு பகுதியில் கடற்கரையில் அதிகளவு அரிப்பு ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த படகுகளும் கடலில் அடித்து செல்லப்பட்டன. அந்த படகுகளை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

எனவே பெரியதாழையில் தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு கிழக்கு பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியதாழையில் தூண்டில் வளைவை நீட்டிக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்