ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை அனுப்பியதாக பெங்களூரு அரிசி வியாபாரி உள்பட 2 பேர் கைது

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை அனுப்பியதாக பெங்களூருவை சேர்ந்த அரிசி வியாபாரி உள்பட 2 பேரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

Update: 2020-10-08 22:31 GMT
பெங்களூரு,

சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து வருகின்றனர். அந்த பயங்கரவாத அமைப்பு மூலம் பல்வேறு நாடுகளில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சதிதிட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அப்துர் ரகுமான் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து இருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் போது 2013-2014-ம் ஆண்டுகளில் பயங்கரவாதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் பெங்களூருவில் இருந்து கொண்டு தென்இந்தியாவை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து அப்துர் ரகுமான் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்த்ததும் தெரியவந்தது.

மூளைச்சலவை

இந்த நிலையில் அப்துர் ரகுமானிடம் நடத்திய விசாரணையின் போது தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது அப்துல் காதர் (வயது 40), பெங்களூரு பிரேசர் டவுனை சேர்ந்த இர்பான் நசீர் (33), அவர்களது கூட்டாளிகள் ஆகியோர் சேர்ந்து குர்ரான் வட்டம் என்ற அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் மூலம் முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி எடுப்பதற்காக சிரியாவுக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. மேலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு 2 பேரும் நிதி திரட்டி வந்ததும், இவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட 2 பேர் சிரியாவில் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் அப்துல் காதரும், இர்பான் நசீரும் ஹிஸ்-உத்-தெஹ்ரிர் என்ற அமைப்பின் உறுப்பினர்களாகவும் இருந்து வந்தனர்.

இதையடுத்து அகமது அப்துல் காதர், இர்பான் நசீர் ஆகியோரை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி அகமது அப்துல் காதர், இர்பான் நசீர் ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமையினர் வழக்கும் பதிவு செய்து இருந்தனர். பின்னர் 2 பேரின் நடவடிக்கைகளையும், தேசிய புலனாய்வு முகமையினர் கண்காணித்து வந்தனர்.

கைது

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி குரப்பனபாளையா, பிரேசர் டவுனில் உள்ள அகமது அப்துல் காதர், இர்பான் நசீர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 2 பேரின் வீடுகளில் இருந்தும் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

மேலும் அகமது அப்துல் காதரும், இர்பான் நசீரும் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை அனுப்பியதும் தெரியவந்ததால் அவர்கள் 2 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 10 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கைதான அகமது அப்துல் சென்னையில் உள்ள வங்கியில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இர்பான் நசீர் பெங்களூருவில் அரிசி கடை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்