திருச்சியில், தந்தையை தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருந்த இருவரை கொல்ல கூலிப்படையை அமர்த்திய வக்கீல், தம்பியுடன் கைது - பட்டாக்கத்திகளுடன் சுற்றிய 4 பேரும் சிக்கினர்

திருச்சியில் தந்தையை கொல்ல திட்டமிட்டிருந்த இருவரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை அமர்த்திய வக்கீல், அவரது தம்பி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-10-08 22:45 GMT
திருச்சி,

திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்தில் முதலியார் சத்திரம் நாகம்மாள் கோவில் அருகே ஒரு ரவுடிக்கும்பல் பட்டாக்கத்திகள், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் ரவிஅபிராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் விரைந்தனர். அப்போது அங்கு நின்ற சிலர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேரை தீர்த்துக்கட்ட வந்ததையும் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் திருச்சி முதலியார் சத்திரம் ஆசாரி தெருவை சேர்ந்த சங்கர் மகன் ராஜ்கமல் (வயது 21), மதுரை அரசடி ஜெயில் ரோட்டை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (23), மதுரை ஆரப்பாளையம் மஞ்சமேட்டு காலனியை சேர்ந்த சண்முகம் மகன் அஜய் பிரசன்னகுமார் (19), திருச்சி கோரிமேடு கூனிபஜாரை சேர்ந்த கந்தன் மகன் ஜோ என்ற பிரசாத் (21) மற்றும் திருச்சி பொன்மலை வாசுதேவன் மகன் ஆனந்தகுமார் (21) ஆவர். கைதானவர்களில் ராஜ்கமலை தவிர அனைவரும் கூலிப்படையினர் ஆவர்.

போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் வருமாறு:-

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த ரவுடி சந்துரு என்பவரை கொலை செய்த வழக்கில் ராஜ்கமலின் தந்தை சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் தொடர்புடையவர்களாக இருந்தனர். எனவே, சந்துரு கொலையில் தொடர்புடைய சங்கரை தீர்த்து கட்ட வேண்டும் என சந்துருவின் நண்பர்களான பிரின்ஸ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் திட்டமிட்டிருப்பதை ராஜ்கமல் அறிந்திருந்தார்.

எனவே, அவர்கள் தனது தந்தை சங்கரை கொலை செய்யும் முன்பு பிரின்ஸ், முருகானந்தம் ஆகியோரை தீர்த்து கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மதுரை மற்றும் திருச்சியை சேர்ந்த கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து ராஜ்கமல் அழைத்து வந்திருந்தது தெரியவந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் பிரின்ஸ், முருகானந்தம் ஆகியோரை கொலை செய்ய பட்டாக்கத்திகளுடன் கூலிப்படையினர் நின்று கொண்டிருந்தபோதுதான் போலீசில் சிக்கியது தெரியவந்தது. கூலிப்படையினரிடம் இருந்து 2 பட்டாக்கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிரின்ஸ், முருகானந்தம் ஆகியோரை மட்டும்தான் தீர்த்து கட்டும் முடிவில் கூலிப்படையினர் வந்தார்களா? அல்லது வேறு யாரையும் கொலை செய்யும் திட்டத்தில் வந்தனரா? என கைதானவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி அபிராம் விசாரணை நடத்தினார்.

மேலும் இதுதொடர்பாக ராஜ்கமலின் அண்ணனும், வக்கீலுமான ரவிக்குமார் (25) என்பவரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். ரவிக்குமாரும், அவரது தம்பி ராஜ்கமலும் தந்தையை தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருந்த 2 பேரை கொல்வதற்காக கூலிப்படையை அமர்த்தியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 6 பேரும் திருச்சி 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்