கோவை அருகே ருசிகரம்: வயலில் இறங்கி நாற்று நட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார்

கோவை அருகே நெல் வயலில் இறங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நெல் நாற்று நட்டார். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார்.

Update: 2020-10-09 06:15 GMT
கோவை, 

கோவையை அடுத்த சாடிவயல் உள்பட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்றுக்காலை காரில் சென்று கொண்டிருந்தார். சாடிவயல் அருகில் உள்ள கல்குத்தி பதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோர வயலில் பழங்குடியின மக்கள் நெல் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்ததும் அமைச்சர் காரை நிறுத்த சொன்னார். உடனே அவர் காரில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் வயல் வரப்பில் நடந்து சென்று உழவு பணியில் ஈடுபட்டிருக்கொண்டிருந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர் திடீரென்று சேறு நிரம்பிய வயலில் வேட்டியை மடித்துக் கொண்டு இறங்கி அங்கிருந்தவர்களிடம் நாற்றுகளை கேட்டு வாங்கினார். உடனே அவர்கள் நாற்றுகளை அவரிடம் கொடுத்ததும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பழங்குடியின மக்களுடன் இணைந்து நெல் நாற்று நட்டார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வயலில் இறங்கி நாற்று நடுவதை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். அவர் சிறிது நேரம் நாற்று நட்டதும் வயலில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது அந்த பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் தேவைகள் என்ன? வாழ்வாதாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றி கேட்டறிந்தார். மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்கு தடையின்றி செய்து கொடுக்க வேண்டும். அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு எந்த மாதிரியான விதை பயிர்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவற்றை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அதன்பிறகு அவர் கூறியதாவது:-

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிற வேளாண் தொழிலை மேம்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து அவர்களின் வருமானத்தைப் பலமடங்காக உயர்த்திடவும்,தமிழகத்தில் 2-ம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில், தமிழக அரசு ஆண்டுதோறும் நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கி வருகிறது. முதல்- அமைச்சரின் உத்தரவின்படி, வேளாண்மைத்துறை மூலம் குறுவை நெல் சாகுபடிக்குத் தேவையான குறைந்த வயதுடைய சான்று நெல் ரக விதைகளை அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் முன்கூட்டியே இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகித்து வருகிறது.

அரசின் இத்தகைய நடவடிக்கைகளினால், விவசாயிகள் நாற்றங்கால் மற்றும் நடவுப் பணிகளை முன்னதாகவே தொடங்கி, பாசன நீரை முழுமையாக பயன்படுத்தி நெல் நடவு மேற்கொள்ள வழிவ குக்கப்பட்டுளள்ளது. மேலும், திருந்திய நெல்சாகுபடி முறைகள், நேரடி நெல் விதைப்பு ஆகியதொழில்நுட்பங்களாலும் சமுதாய நாற்றங்கால் முறையிலும் நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தக்க காலத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2020--21-ம் நிதியாண்டில் கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும்கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து, மலைவாழ் பகுதியில் மின்கலன்வேலி அமைப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.23 ஆயிரம் வழங்கினார். அதன்பின்னர் அரசின் வளர்ச்சித் திட்டப்பணிளின் தொடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இய க்குனர் (பொ) ரூபன்சங்கர் ராஜ், கோட்ட வருவாய் அதிகாரி தனலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பசுபதி, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்