பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம்: 3 போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் - கடலூரில், தமிழ் இன உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் தொடர்பாக 3 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து கடலூரில் தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-10-09 06:15 GMT
கடலூர்,

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கடந்த செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த ரங்கராஜ், போக்குவரத்து போலீஸ்காரர் ரஞ்சித், திருப்பாதிரிப்புலியூர் போலீஸ்காரர் அசோக் ஆகிய 3 பேர், கடலூர் அண்ணா பாலம் அருகில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

அதனை அவர்கள் 3 பேரும் செல்போனில் புகைப்படம் எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதுபற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர், இதுசம்பந்தமாக விசாரணை நடத்தி, அதன் விசாரணை அறிக்கையை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.க்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் போலீஸ்காரர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய 3 பேரையும் கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. எழிலரசன் உத்தரவிட்டுள்ளார். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் 3 போலீஸ்காரர்கள் இடமாற்றத்தை கண்டித்து கடலூரில் உள்ள பெரியார் சிலை முன்பு அனைத்து தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளருமான திருமார்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி ஓவியர் ரமேஷ், தி.க. மாவட்ட தலைவர் சிவக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், எஸ்.டி.பி.ஐ. நகர செயலாளர் சபீக் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகள் ஸ்ரீதர், நாகவேந்தன், சுபாஷ், நகர செயலாளர் செந்தில், துணை செயலாளர் மகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்