இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் எச்.ஏ.எல். நிறுவன ஊழியர் கைது

இந்திய போர் விமானங்கள் பற்றிய தகவல்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு கொடுத்த எச்.ஏ.எல். நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-10-09 21:10 GMT
மும்பை,

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (எச்.ஏ.எல்.) இந்திய ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்களை தயாரித்து வருகிறது. மேலும் இந்த நிறுவனம் நாசிக், கோர்வா, கான்பூர் உள்ளிட்ட இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நாசிக்கில் செயல்பட்டு வரும் எச்.ஏ.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாசிக் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு நம்பத்தகுந்த தகவல்கள் வந்தன. இதையடுத்து போலீசார் அந்த ஊழியரை நாசிக்கில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரது பெயர் தீபக் ஷிர்சாத் (வயது 41) என்றும், அவர் உதவி மேற்பார்வையாளராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.

ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தகவல்

பின்னர் நடந்த விசாரணையில், அவர் இந்திய போர் விமானங்கள் பற்றிய ரகசிய தகவல்கள் மற்றும் நாசிக், ஒஜ்கார் பகுதியில் உள்ள எச்.ஏ.எல். நிறுவன உற்பத்தி பிரிவு பற்றிய தகவல்களையும் ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு வழங்கி வந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரிடம் இருந்து 3 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 2 மெமரி கார்டுகளை பறிமுதல் செய்து உள்ளனர். இவை அனைத்தும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எச்.ஏ.எல். ஊழியரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை 10 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலில் வைத்து விசாாிக்க உத்தரவிட்டது.

இந்திய போர் விமானங்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தவர் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்