திருந்தி வாழ முயன்றதால் ஆத்திரம்: ரவுடியை அடித்துக் கொன்ற கூட்டாளிகள் 7 பேர் கைது

திருந்தி வாழ முயன்ற தால் ஆத்திரமடைந்து ரவுடியை அடித்து கொன்ற அவரது கூட்டாளிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 2 பேருக்கு தொற்று உறுதியானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2020-10-09 22:19 GMT
அரியாங்குப்பம்,

புதுவை திப்புராயப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்பிளான் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சவுந்தரபாண்டியன் (23), தணிகாஷ் (24), கவுசி தாவீது (24). ரவுடிகளான இவர்கள் மீது இரட்டை கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் தெய்பிளானுக்கு திருமணமானதை தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்து மனைவி, குழந்தைகளுடன் திருந்தி வாழ தொடங்கினார். இதையொட்டி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இதனால் தெய்பிளான் மீது சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட கூட்டாளிகள் கடும் ஆத்திரமடைந்தனர்.

சம்பவத்தன்று இரவு தெய்பிளானை தேங்காய்திட்டு துறைமுகத்திற்கு கடத்திச் சென்று சவுந்தரபாண்டியனும், கூட்டாளிகளும் சேர்ந்து கட்டி வைத்து கட்டையால் அடித்து உதைத்து தாக்கினர். இதில் அவருக்கு கை, கால்கள் முறிந்தன. இதையடுத்து தெய்பிளானை அந்த இடத்திலேயே போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த தெய்பிளானை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

7பேர் கைது

இதுதொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரபாண்டியன், தணிகாஷ், கவுசி தாவீது உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதையடுத்து கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதார குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்