சண்டே மார்க்கெட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

சண்டே மார்க்கெட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-10-09 22:25 GMT
புதுச்சேரி,

புதுவை மாநகரில் சண்டே மார்க்கெட் பிரபலமானது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு விதமான பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சண்டே மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் அங்கு வியாபாரம் செய்பவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பல கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கூடங்கள்கூட திறக்கப்பட்டுள்ளன. பஸ்கள், டெம்போக்கள் ஓடுகின்றன. திரையரங்குகளும் விரைவில் திறக்கப்பட உள்ளன.

தீர்வு காணவேண்டும்

இதுபோன்ற நிலையில் அடுத்த வேளை உணவுக்கே மிகவும் கஷ்டப்படும் சண்டே மார்க்கெட் தொழிலாளர் களை வாழவைக்க மாநில அரசு உதவிட வேண்டும். ஏனெனில் அவர்கள் வட்டிக்கு பணம் வாங்கி கடை வைத்து பிழைத்து வருகின்றனர். எனவே அரசு சண்டே மார்க்கெட் வியாபாரிகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவற்றை முறைப்படுத்தி நடத்த அனுமதிக்கவேண்டும்.

குறிப்பாக கொரோனா காலம் முடியும்வரை அவர்களை 3 பிரிவுகளாக பிரித்து சமூக இடைவெளியை உறுதி செய்து கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் சம்மதத்தோடு மாற்று இடங்களில் சில காலம் மட்டும் கடைகள் நடத்த அனுமதிக்கவேண்டும். புதுவை அரசு அவர்களை உடனடியாக அழைத்து பேசி நல்ல தீர்வை காணவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்