இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி சாலையில் கஞ்சி காய்ச்சி நரிக்குறவர்கள் போராட்டம்

இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி சாலையில் கஞ்சி காய்ச்சி நரிக்குறவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-10-09 22:27 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் மூர்த்தி நகர் கூடப்பாக்கம் சாலையில் பல ஆண்டுகளாக நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இலவச மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலவச மனைப்பட்டா கேட்டு புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியினர் இயக்கம் சார்பில் கூடப்பாக்கம் சாலையில் நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், நிர்வாகிகள் செல்வநாதன், எழில்மாறன், தமிழ்வளவன் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கஞ்சி காய்ச்சினர்

போராட்டத்தில் பங்கேற்ற நரிக்குறவர்கள் சாலையில் கற்கால் அடுப்பு அமைத்து கஞ்சி காய்ச்சினர். மேலும் அவர்கள் சாலையில் ஆமைகளை விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்துபோக செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்