மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் கனிமவளங்கள் கொள்ளயடிக்கப்படுவதை தடுக்க மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-09 22:45 GMT
சென்னை,

தமிழகத்தில் கனிமவள கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்த இந்தக்குழு, சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

நடவடிக்கை இல்லை

மேலும், கிரானைட் முறைகேடு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 212 பரிந்துரைகளை அளித்து இருந்தது.

இந்தநிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அல்லாமல் புதிய நிபுணர் குழு அமைத்து இழப்பீடு தொடர்பாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் தொடர்ந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.

நீதிபதிகள் அதிருப்தி

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கனிம வளங்கள் கொள்ளையை தடுக்க நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதனை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், தமிழகத்தில் சுரண்டப்பட்ட கனிமவளங்களில் இதுவரை எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்பு பதிவு செய்யப்பட்டுள்ள கனிமவள முறைகேடு தொடர்பான 70 வழக்குகளின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலருடைய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா

இதைத்தொடர்ந்து, கனிமவள கொள்ளைகளை தடுக்கும் வகையில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கனிமவள கொள்ளைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் செய்திகள்