லஞ்சம், ஊழலை ஒழிக்கக்கோரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் - தடையை மீறியதாக 12 பேர் மீது வழக்கு

கூடலூரில் லஞ்சம், ஊழலை ஒழிக்கக்கோரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தடையை மீறியதாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2020-10-09 22:15 GMT
கூடலூர்,

கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் லஞ்சம், ஊழலை ஒழிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கபட்டது. ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை காரணம் காட்டி போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தடையை மீறி அனைத்து மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் நேற்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு சட்ட ஆலோசகர் வக்கீல் ஸ்ரீஜேஷ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம், ராஜேஷ், அர்ஜுன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து லஞ்சம், ஊழல் அனைத்து துறைகளிலும் நடைபெறுவதாக புகார் தெரிவித்து பலர் பேசினர். பின்னர் லஞ்சம், ஊழலை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் சதீஷ், முஸ்தபா உள்பட மாணவர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

இதனிடையே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அனைத்து மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 12 பேர் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, கொரோனா பரவலால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழுவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்