அக்டோபர் விடுமுறை ரத்து: ஆசிரியர்கள், சர்வாதிகாரத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களா? குமாரசாமி கேள்வி

ஆசிரியர்கள் சர்வாதிகாரத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-10-11 22:27 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று பணியாற்றுகிறார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு பணியிலும் ஈடுபடுகிறார்கள். வித்யாகம திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு கற்பிக்க பள்ளிகளுக்கு நேரிலும் செல்கிறார்கள். மாநில அரசு ஆசிரியர்களுக்கு வழக்கமாக அக்டோபர் 3-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விடுமுறை வழங்கும். ஆனால் அந்த விடுமுறையை அரசு ரத்து செய்துள்ளது. அவர்களை தொடர்ந்து பணிக்கு வரும்படி வற்புறுத்துகிறது.

ஆசிரியர்கள் என்றால் சர்வாதிகாரத்தின் கீழ் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களா?. குழந்தைகள் பள்ளிக்கு வருவது இல்லை. ஆனால் ஆசிரியர்களை இந்த அரசு வேறு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. ஆசிரியர்களை கவுரவமாக நடத்த வேண்டிய அரசு, அவர்களை மிரட்டி பணிக்கு வரும்படி உத்தரவிடுகிறது. ஆசிரியர்களுக்கு இந்த மாதம் விடுமுறை வழங்க வேண்டும். இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள தனது உத்தரவை வாபஸ் பெறவேண்டும்.

கவுரவ விரிவுரையாளர்கள்

அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 சம்பளம் உயர்த்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். அரசு கல்லூரிகளில் கடந்த ஆண்டு பணியாற்றிய அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் இந்த ஆண்டு மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்