அம்பை அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை உணவுப்பொருட்கள் வழங்க கோரிக்கை

அம்பை அருகே உணவுப்பொருட்கள் வழங்கக்கோரி, ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2020-10-11 23:15 GMT
அம்பை,

அம்பை அருகே வாகைகுளம் மெயின் ரோடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் வழங்க பயன்படுத்தும் பயோமெட்ரிக் எந்திரத்தில் இணையதள இணைப்பு கடந்த சில நாட்களாக சரியாக கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க முடியாத நிலை உள்ளது. தினமும் ரேஷன் கடையில் காலை முதல் மாலை வரையிலும் பொதுமக்கள் காத்து கிடந்தும், உணவுப்பொருட்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்றும் அந்த ரேஷன் கடையில் பயோமெட்ரிக் எந்திரத்துக்கு இணையதள இணைப்பு கிடைக்கவில்லை என்று ரேஷன் கடை ஊழியர் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டினியால் வாடும் துயரம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் எந்திரத்துக்கான இணையதள இணைப்பு மெதுவாகவே கிடைக்கிறது. இதனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஒரு சிலருக்கு மட்டுமே உணவுப்பொருட்கள் கிடைக்கிறது.

இதனால் பெரும்பாலானவர்கள் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் வாடும் துயரம் உள்ளது. பயோமெட்ரிக் எந்திரம் இயங்கவில்லையெனில், பழைய முறைப்படி உணவுப்பொருட்களை வழங்கலாம் என்று அரசு உத்தரவிட்டும் அதனை யாரும் செயல்படுத்தவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்