திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்களிடம் 50 பவுன் நகை மோசடி - வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கைது

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்களிடம் 50 பவுன் நகை மோசடி செய்த வங்கி ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-12 22:03 GMT
கோவை,

ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ் (வயது 30). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு மணமகள் தேவை என்று இணையதளத்தில் உள்ள திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அப்போது அவருடைய செல்போன் எண்ணுக்கு ஏராளமான இளம்பெண்கள், விதவைகள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களிடம் திருமண ஆசைகாட்டி பேசி உள்ளார். அத்துடன் அவர் கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் திருவண்ணாமலையில் இருந்து கோவை வந்த அவர் அந்த இளம்பெண்ணிடம் 7 பவுன் நகையை பெற்று சென்றார். பின்னர் அவர் அந்த நகையை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் அந்த இளம்பெண் கார்த்திக் ராஜ் மீது சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் திருவண்ணாமலைக்கு சென்று கார்த்திக் ராஜை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் உள்பட பல பெண்களிடம் திருமண ஆசைவார்த்தை கூறி நகைகளை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கார்த்திக் ராஜ் சினிமா பாணியில் மன்மதன் போல் நடித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களிடம் பழகி உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தனது இந்த மோசடி விளையாட்டை தொடங்கி இருக்கிறார். தனக்கு தொடர்பு கொண்டு பேசும் பெண்களிடம், எனக்கு வங்கியில் பணம் வர வேண்டி உள்ளது, ஆனால் அது வர சிறிது வாரங்கள் ஆகும். ஆனால் எனக்கு கடன் பிரச்சினை உள்ளதால், நகை யை கொடுங்கள், அதை நான் அடமானம் வைத்து கடனை கொடுத்து விடுகிறேன். வங்கியில் இருந்து பணம் வந்ததும், நகையை மீட்டு உங்களிடம் திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று கூறி கோவையை சேர்ந்த 3 இளம்பெண்கள், பொள்ளாச்சி, ஈரோடு, ராஜபாளையம், சிவகாசி, பெரம்பூர், பெங்களூரு உள்பட பல இளம் பெண்கள், விதவைகள் என்று பலரிடம் 50 பவுன் நகையை வாங்கி மோசடி செய்து உள்ளார்.

இவர் மோசடி செய்த நகையை அடகு வைக்கவும், விற்பனை செய்யவும் இவரது நண்பர் பிரசாந்த் என்பவர் கூட்டாளியாக செயல்பட்டுள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்கள் 2 பேரிடம் இருந்தும் தற்போது 13 பவுன் நகை மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்