அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் தர்ணா நாராயணசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-12 22:50 GMT
புதுச்சேரி,

பணி நிரந்தரம், நிலுவை சம்பளம் கேட்டு புதுவை அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று காலை சுதேசி மில் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை புதுச்சேரி தமிழ் சங்கத்தில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் பரவியது.

இதை முன்கூட்டியே அறிந்துகொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தமிழ்சங்க கட்டிடத்துக்கு வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கேயே திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரின் சமாதானத்தை ஏற்க மறுத்து, போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, அங்கன்வாடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை பொறுமையாக இருக்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். அதன்பிறகும் அங்கன்வாடி ஊழியர்கள் இரவு 9.30 மணி வரை அங்கேயே போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன்பின் அங்கன்வாடி ஊழியர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்