நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2020-10-13 11:30 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சியை சேர்ந்த அரசனிபட்டி கிராமத்தில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி பா. சிதம்பரத்தின் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 5 லட்சத்து 83 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மணிமுத்து முன்னிலை வகித்தார். நாடக மேடையை திறந்து வைத்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார்.

விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆரோக்கியசாந்தாராணி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம், மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஸ்ரீவித்யாகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது :- மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழர்களுக்கு விரோதமான அரசு. நமக்கு சேர வேண்டிய தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது நம்முடைய பணம். நமது ஊரின் வளர்ச்சிக்கு செல்ல வேண்டிய பணம். இதை நிறுத்தி வைத்துக்கொண்டு நமக்கு துரோகம் செய்கின்றனர். நடிகை குஷ்பு 180 டிகிரி அந்தர் பல்டி அடித்துள்ளார். இது சாதாரணமான விஷயம் இல்லை. தமிழக அரசு தொழில் முனைவோர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இதற்கு முன்பு போட்ட ஒப்பந்தங்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. தேர்தலுக்கு 6 மாதம் முன்பு இதுபோல நாடகங்கள் நடக்கிறது. ஜி.எஸ்.டி. வரியை பொறுத்தவரை அது முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அனைத்து மாநிலங்களுக்கும் வரவேண்டிய பங்கு இதுவரை கிடைக்கவில்லை. மத்திய அரசுடன் இணக்கமான அரசாக தமிழக அரசு இருந்தும் இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம். நடைபெறவுள்ள தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்