வடகர்நாடகத்தில் தொடர் கனமழை எதிரொலி வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள்

தொடர் கனமழை எதிரொலியாக அலமட்டி, பசவசாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் வட கர்நாடகத்தில் கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

Update: 2020-10-13 22:31 GMT
பெங்களூரு,

விஜயாப்புரா, பெலகாவி, யாதகிரி, கலபுரகி, ராய்ச்சூர், பாகல்கோட்டை உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக இரவு, பகல் பாராமல் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்

வடகர்நாடகத்தில் மழை, வெள்ளத்திற்கு 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில் விஜயாப்புரா மாவட்டம் நிடகுந்தியில் உள்ள அலமட்டி, யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுராவில் உள்ள பசவசாகர் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 2 அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

கடல்மட்டத்தில் இருந்து 519.60 மீட்டர் உயரம் கொண்ட அலமட்டி அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 519.60 மீட்டராக இருந்தது. அதாவது அணை தனது முழுகொள்ளளவை எட்டி நிரம்பிவிட்டது. அணைக்கு வினாடிக்கு 52 ஆயிரத்து 530 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 52 ஆயிரம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதுபோல கடல்மட்டத்தில் இருந்து 492.25 மீட்டர் உயரம் கொண்ட பசவசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 491.25 மீட்டராக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 84 ஆயிரத்து 479 கனஅடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 91 ஆயிரத்து 875 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதாவது 2 அணைகளில் இருந்தும் கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 875 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதன்காரணமாக வடகர்நாடகத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையையொட்டியுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம் பயிர்களையும் அடித்து சென்றது.

அனைத்து சாலைகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. குறிப்பாக கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இதனால் வடகர்நாடகத்தில் பல கிராமங்களை இணைக்கும் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளன. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை, மக்கள் பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றி வருகின்றனர். பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மின்கம்பங்களும் சாய்ந்து உள்ளதால் பல கிராமங்கள் இருளில் தத்தளித்து வருகின்றன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மராட்டியத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 7 லட்சம் கனஅடி வரை கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போதும் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. தற்போது கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம் வடிந்து வந்தது. அதற்குள் தற்போதும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் வடகர்நாடக மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்