குறைந்த விலைக்கு அமெரிக்க டாலர் தருவதாக டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி 3 பேருக்கு வலைவீச்சு

குறைந்த விலைக்கு அமெரிக்க டாலர் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2020-10-14 21:20 GMT
மும்பை,

நவிமும்பை வாஷியை சேர்ந்தவர் ஸ்ரீநாத்(வயது41). டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கு அண்மையில் கல்யாண் பாட்டாவை சேர்ந்த ராஜூ என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் ராஜூ தனது பாட்டி அண்மையில் உயிரிழந்து விட்டதாகவும், அவர் ஏராளமான அமெரிக்க டாலர்கள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அதை குறைந்த விலைக்கு விற்க இருப்பதாக ஸ்ரீநாத்திடம் கூறினார்.

இதனை நம்பிய அவர் அமெரிக்க டாலர்களை வாங்க விருப்பம் தெரிவித்தார். இதற்காக ரூ.2 லட்சம் தருவதாக கூறினார். இதனை தொடர்ந்து ராஜூ தனது நண்பர்கள் 2 பேருடன் சென்று ஸ்ரீநாத்தை சந்தித்து ரூ.2 லட்சம் பெற்றார்.

வெற்று காகிதம்

பின்னர் அவர்கள் வைத்திருந்த அமெரிக்க டாலர்கள் அடங்கிய பண்டல்களை கொடுத்து விட்டு வீட்டில் போய் சரிபார்த்து கொள்ளவும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

வீட்டிற்கு வந்த டிரைவர் ஸ்ரீநாத் பண்டல்களை பிரித்து பார்த்தார். அப்போது அதில் மேலே ஒரே ஒரு நோட்டு மட்டும் அமெரிக்க டாலராகவும் மற்ற அனைத்தும் வெற்று காகிதமாகவும் இருப்பது தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்