வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-10-14 21:53 GMT
பெங்களூரு,

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அதிக மழை பெய்தால், விளைபொருட்களை அறுவடை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். அதுதான் தற்போது கர்நாடகத்தில் நடந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வட கர்நாடகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. விளைந்த விளைபொருட்களையும் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவியாய் தவிக்கிறார்கள்.

அதனால் கர்நாடக அரசு உடனடியாக விளைபொருட்கள் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள விலையில் அந்த பொருட்களை வாங்க வேண்டும். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் குறித்து மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வெங்காயம், பருத்தி, மிளகாய், கேழ்வரகு, சோளம், வெள்ளை சோளம் போன்ற பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிவாரணம் வழங்கவில்லை

வட கர்நாடகத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் துவரை தற்போது பூ விடும் நேரம். இந்த நேரத்தில் கனமழை பெய்துள்ளதால், அந்த பூக்கள் உதிர்ந்து விழுந்துள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் கலபுரகியில் இயல்பை விட அதிக மழை பெய்ததால் 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் துவரை சேதம் அடைந்துள்ளதாக அரசே கூறியது. மற்ற மாவட்டங்களிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. கடலோர கர்நாடகம் மற்றும் மலைநாடு கர்நாடக பகுதிகளிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்-கர்நாடகா, மும்பை-கர்நாடகா பகுதிகளிலும் விவசாய பயிர்கள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன. கடந்த ஆண்டும் இதே நிலை ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால் மத்திய-மாநில அரசுகள் சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. பெலகாவி மாவட்டத்தில் இன்னும் 9 ஆயிரம் வீடுகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்று அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியே கூறியுள்ளார். வீடுகளை இழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அரசு கூறியது. அதில் அரசு ரூ.1 லட்சத்தை மட்டும் வழங்கிவிட்டு மீதி நிவாரணத்தை வழங்கவில்லை.

விளைபொருட்கள்

இந்த முறை விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்களை திறப்பது இல்லை என்று நீங்கள்(எடியூரப்பா) கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் மத்திய அரசு உத்தரவு உள்ளதா? என்பதை நீங்கள் விளக்க வேண்டும். ஒருபுறம் விளைபொருட்கள், அறுவடை செய்ய முடியாமல் நிலத்திலேயே நீரில் மூழ்கி மக்கி வருகின்றன. இன்னொருபுறம் அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்நாடக அரசு ரூ.90 ஆயிரம் கோடி கடன் பெற முடிவு செய்துள்ளது. இது மட்டுமின்றி பெட்ரோல்-டீசல் மற்றும் மதுபானங்கள் மீது அரசு அதிகளவில் வரி விதித்து வசூலித்து வருகிறது. இதை கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ அரசு முன்வர வேண்டும். கொரோனா பரவல் காரணமாக நகரங்களில் இருந்த மக்கள் அதிகளவில் கிராமங்களுக்கு சென்றுவிட்டனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட விவசாய பணிகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் விவசாய விளைபொருட்கள் சாகுபடியும் அதிகரித்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்