நேரடி பணபரிமாற்றம் தொடர்பாக 9 லட்சம் பயனாளிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை கவர்னர் கிரண்பெடி தகவல்

நேரடி பணபரிமாற்றம் தொடர்பாக 9 லட்சம் பயனாளிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

Update: 2020-10-14 22:55 GMT
புதுச்சேரி,

புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதை கவர்னர் தடுக்கிறார். அவருக்கு ஆதரவாக மத்திய அரசும் இருக்கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யும் முறைதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட வினியோக முறை என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அரசின் நிதி சலுகைகள் தகுதியுள்ளவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செல்வதை உறுதி செய்கிறது. இதுதொடர்பாக 9 லட்சம் பயனாளிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை.

பாதிப்பு இல்லை

வேறு யாருக்கு சிக்கல் உள்ளது? இந்த திட்டத்தால் பயன்பெறுகிற மக்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. பரிமாற்றத்தில் எந்த பாதிப்பும் இல்லை. ரசீதுகள் தேவையில்லை. ஒப்பந்தங்கள் தேவையில்லை. டெண்டர்கள் இல்லை. நிலுவை இல்லை. வினியோகம் தொடர்பான புகார்கள் இல்லை. தரத்தில் புகார்கள் இல்லை. எடை குறைவு என புகார்கள் இல்லை.

அதேபோல் வினியோக கடைகள் மூடப்பட்டதாக எந்த புகாரும் இல்லை. ஆகவே மக்களுக்காக வேலை செய்யும் ஒரு அமைப்பு மக்களின் பிரதிநிதிகளை ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? யூனியன் பிரதேசத்தின் முடிவு என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவுக்கு ஒப்பாகும். புதுவை யூனியன் பிரதேசம் ஐகோர்ட்டில் வழங்கப்பட்ட அதன் முடிவுகளை பாதுகாக்கிறது. நிர்வாகியான துணைநிலை ஆளுநர் (கவர்னர்) இந்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் இடையேயான தொடர்பினை ஏற்படுத்துகிறார்.

இந்திய அரசின் கொள்கை

மக்களின் நலன் மிகவும் நேர்மையுடனும், வெளிப்படையான முறையிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது கடமையாகும். பொதுமக்களுக்கு நேரடி பணபரிமாற்றம் செய்யும் முறை இந்திய அரசின் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை அடிப்படையாக கொண்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீதிமன்றத்தின் உத்தரவு வந்துள்ளது. எனவே இவற்றில் பொய்யான தகவல்கள் எங்கு உள்ளது?

இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்