லஞ்சம் வாங்கியதாக புதுவை நகராட்சி என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

லஞ்சம் வாங்கியதாக புதுவை நகராட்சி என்ஜினீயரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2020-10-14 22:58 GMT
புதுச்சேரி,

புதுவை கம்பன் கலையரங்கில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் துப்புரவுப் பணிகள், வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரி வசூல், கடைகளுக்கு உரிமம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில் புதுவை தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த இளந்திரையன் என்பவர் அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக சாலையில் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை கொட்டி வைத்திருந்தார். அங்கு ஆய்வு நடத்திய புதுச்சேரி நகராட்சி இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, அனுமதியின்றி கட்டுமானப் பொருட்கள் குவித்து வைத்து இருப்பதற்கு அபராதம் விதிக்காமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் இளந்திரையன் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார்.

இதுபோதாது என்று கிருஷ்ணமூர்த்தி மேலும் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளந்திரையன் இதுபற்றி சென்னை சி.பி.ஐ. போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

கையும் களவுமாக சிக்கினார்

இதுகுறித்து விசாரிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பஸ்வைய்யா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ரகசியமாக புதுவை நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தனர். சாதாரண உடையில் அங்கு சுற்றியபடி மாறுவேடத்தில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறப்படுகிறதா? என கண்காணித்தனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி இளந்திரையன் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். உடனே அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தின் நுழைவாயில்களை பூட்டி அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.

வீட்டிலும் சோதனை

இதேபோல் திலாசுபேட்டையில் உள்ள நகராட்சி என்ஜினீயர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினார்கள். புதுவை நகராட்சி அலுவலகம், என்ஜினீயர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. லஞ்சம் வாங்கிய கிருஷ்ணமூர்த்தியுடன் மற்ற அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

லஞ்சம் வாங்கியதாக புதுவை நகராட்சி என்ஜினீயர் கைதான சம்பவம் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்