வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கால்வாய் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கால்வாயில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-10-14 23:23 GMT
படப்பை,

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் வட்டம் படப்பை அருகே ஆதனூர் அடையாறு கால்வாய் ஆரம்ப நிலையத்தில் இருந்து நடைபெற்றுவரும் தூர்வாருதல் மற்றும் தடுப்பணை பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரான சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வரதராஜபுரம் மகாலட்சுமி நகர், அஷ்டலட்சுமி நகர், அட்டை தொழிற்சாலை பாலம், சோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளத்தடுப்பு, தடுப்பணை கட்டுதல் மற்றும் கால்வாய் சீரமைப்பு தூர்வாரும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டி.ஸ்ரீதர், குன்றத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் நயிம் பாஷா, செயற்பொறியாளர் ரமேஷ், உதவி பொறியாளர் குஜராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

அடையாற்றில் பணிகள்

பின்னர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழையையொட்டி, அடையாற்றின் ஒட்டி யுள்ள பகுதிகளில் தண்ணீர் புகாத வண்ணம் அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டுமென முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஏறக்குறைய ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

அடையாற்றில் 1.35 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படுகிறது. அவ்வாறு நீர் சேமிக்கப்படுவதால் அடையாற்றில் ஏற்படும் வெள்ளம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் வரதராஜபுரம் அணைகளில் ரூ.12 கோடி நிதி மதிப்பீட்டில் முதற்கட்டமாக உபரிநீர் வடிவம் தரும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே பல பணிகள் முடிக்கப்படுவதன் மூலம் குடியிருப்புகளில் நீர் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்