நெல்லையில் கூடுதல் கட்டணம் வசூலித்த மின்வாரிய அதிகாரிகளுக்கு அபராதம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

நெல்லையில் கூடுதல் மின் கட்டணம் வசூலித்த மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2020-10-14 23:38 GMT
நெல்லை,

நெல்லை கோடீசுவர நகரை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது வீட்டில் மின்சார வாரியம் சார்பில், பழைய மின் கணக்கீட்டு மீட்டரை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக புதிய மின் கணக்கீட்டு மீட்டரை பொருத்தினர். அப்போது புதிய மின் கணக்கீட்டு மீட்டரில் 1,000 யூனிட் மின்சாரத்தை ஏற்கனவே பயன்படுத்தி இருந்ததாக பதிவாகி இருந்தது.

பின்னர் அங்கு மின் கணக்கீடு பதிவு செய்ய வந்த மின்வாரிய அலுவலர், ஏற்கனவே பயன்படுத்தி இருந்த 1,000 யூனிட்டை கழிக்காமல், அதனை கூடுதலாக கணக்கிட்டு மின் கணக்கீடு பதிவு செய்தார். இதுகுறித்து அபூபக்கர் சித்திக், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தார். அப்போது மின்வாரிய ஊழியர்கள் கூடுதல் கட்டணத்தை குறைத்து செலுத்துமாறு கூறினார்கள்.

கூடுதல் கட்டணம் வசூலிப்பு

ஆனாலும் அடுத்த முறை மின் கணக்கீடு செய்தபோது, கூடுதலாக 1,000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதாக கணக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அபுபக்கர் சித்திக்கிடம் இருந்து கூடுதலாக ரூ.2,777 கட்டணத்தை மின்வாரியம் வசூலித்தது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அபுபக்கர் சித்திக் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார்.

அபராதம் விதிப்பு

இந்த வழக்கை நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்கள் சிவமூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள். அந்த தீர்ப்பில், மின்வாரிய உதவி பொறியாளர், நிர்வாக பொறியாளர், மேற்பார்வை தலைமை பொறியாளர் ஆகிய 3 பேரும் சேர்ந்து அபுபக்கர் சித்திக்குக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு, வழக்கு செலவு ரூ.5 ஆயிரம், மேலும் கூடுதலாக வசூலித்த ரூ.2 ஆயிரத்து 277 கட்டணம் ஆகியவற்றை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்