குடியாத்தம் அருகே தமிழக எல்லையோரம் பயங்கரம்: டிரைவரை துதிக்கையால் தரையில் போட்டு அடித்துக்கொன்ற காட்டு யானை - ஜீப்பையும் புரட்டிப்போட்டு ருத்ரதாண்டவம்

தமிழக எல்லையோரம் ஆந்திராவில் ருத்ரதாண்டவம் ஆடிய மதம்பிடித்த காட்டு யானை ஜீப்பை புரட்டிப்போட்டு டிரைவரை துதிக்கையால் தரையில் போட்டு அடித்துக்கொன்றது.

Update: 2020-10-15 13:15 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லையோரம் ஆந்திராவில் கந்தலைசெருவு என்ற பகுதியில் மாலை 5 மணியளவில் ஆந்திர வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக எதிரே 2 மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்களை அங்குச் சுற்றித்திரிந்த மதம் பிடித்த ஒற்றை காட்டு யானை விரட்டியது. அவர்கள் தப்பியோடி விட்டனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த வனத்துறையினர் ஜீப்பை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பியோடினர். அவர்களை பார்த்த யானை ஜீப்பை தலைகீழாகப் புரட்டிப்போட்டு விட்டு, அவர்களை விரட்டியது. அதில் ஜீப் டிரைவர் பாபு யானையிடம் சிக்கினார். அவரை, காட்டு யானை ருத்ரதாண்டவம் ஆடி தும்பிக்கையால் தூக்கி தரையில் அடித்தும், காலால் மிதித்தும் சம்பவ இடத்திலேயே கொன்றது.

வனக்காப்பாளர் ஹரி தப்பியோடி விட்டார். பாபுவின் பிணத்தை சித்தூர் மாவட்டம் யாதமரி போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது தமிழக வனப்பகுதியில் டி.பி.பாளையம் அருகே ஒற்றை காட்டு யானை நிலத்தில் புகுந்து விளை பயிரை நாசம் செய்தது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் மதம் பிடித்த காட்டு யானை வனத்துறையினரை விரட்டியது. அவர்கள் தப்பியோடி விட்டனர்.

மேலும் செய்திகள்