தூத்துக்குடியில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி 35-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய்களை ரோடு ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-10-15 21:02 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி 35-வது வார்டுக்கு உட்பட்ட மில்லர்புரம், சின்னமணி நகர், சிலோன் காலனி, ராஜீவ் நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, 3வது மைல், தபால்தந்தி காலனி ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்னாள் கவுன்சிலர் சந்திரபோஸ் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோரிக்கை

இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரோடுகள் மற்றும் மின்கம்பங்கள், நடை பாதைகள், அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால் மெயின்ரோட்டில் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களும் அடிக்கடி உடைந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகுந்த சிரமப் படுகின்றனர். எனவே மெயின் ரோட்டில் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மெயின் ரோட்டின் ஓரங்களில் மாற்றி அமைக்க வேண்டும். மேலும் 3 இன்ஞ் அளவு உள்ள குடிநீர் மெயின் குழாயை 4 இன்ஞ் அளவு குழாயாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது.

கமிஷனர் உறுதி

கோரிக்கைகளை வலியுறுத்தி சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதியளித்ததால், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்