ஆவடி ரெயில் நிலையம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்

ஆவடி ரெயில் நிலையம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-15 23:14 GMT
ஆவடி,

ஆவடி ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்மநபர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்றார். ஆனால் நீண்டநேரம் முயன்றும் அவரால் பணம் இருந்த பெட்டியை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் பொதுமக்கள் பணம் எடுப்பதற்காக சென்றபோது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயல்வதும், ஆனால் முடியாததால் திரும்பிச்செல்வதும் பதிவாகி இருந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

வாலிபர் கைது

இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபரின் உருவத்தை வைத்து சம்பவம் தொடர்பாக சென்னை காந்தி நகர், பல்லவன் சாலை, கல்லரை, சிவசக்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 27) என்பவரை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்