கால்நடைத்துறையினரின் அலட்சியத்தால் காதில் புண்ணுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக அவதிப்படும் மாடுகள்

காஞ்சீபுரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கால்நடைத்துறை சார்பில் சிறுகாவேரிப்பாக்கம், கீழம்பி உள்ளிட்ட கிராமங்களில் மாடுகள் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

Update: 2020-10-15 23:29 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கால்நடைத்துறை சார்பில் சிறுகாவேரிப்பாக்கம், கீழம்பி உள்ளிட்ட கிராமங்களில் மாடுகள் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி நடந்தது. மாடுகள் கணக்கு எடுக்கப்பட்டதற்கு அடையாளமாக அனைத்து மாடுகளின் காதுகளிலும் கம்மல் போல ஓட்டை போட்டு அடையாள அட்டை மாட்டி விடப்பட்டது.

அவ்வாறு மாடுகளின் காதில் ஓட்டை இடும் போது சரியான இடத்தில் ஓட்டை இட வேண்டும். அப்படி சரியான இடத்தில் குத்தவில்லை என்றால், காதுகளில் இருக்கும் நரம்பில் பட்டுவிடும்.

ஊழியர்கள் கணக்கிடும் பணி நடக்கும் போது அதிக அளவு மாடுகள் வந்ததால் வேக வேகமாக பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக சரியான இடத்தில் குத்தாமல் மாடுகளின் காதுகளில் உள்ள நரம்புகளில் குத்தி விட்டு சென்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அவ்வாறு நரம்புகளில் குத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிப்படைந்துள்ளது.

காதுகளில் புண்ணாகி ரத்தம் கசிந்து சீழ் வடிந்து வருகிறது. ஒரு மாத காலமாக தொடர்ந்து மாட்டுக்கு சிகிச்சை அளித்தும் பலன் கிடைக்காமல் மாடு வளர்ப்போர் தவித்து வருகின்றனர். அதேபோல் சில மாடுகளுக்கு காது அழுகி கீழே விழுந்துள்ளது. கால்நடை ஆம்புலன்சை தொடர்பு கொண்டாலும் சரியாக பதிலளிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்