கிராம பஞ்சாயத்து தலைவரை தரையில் அமர வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழக கவர்னருக்கு, மந்திரி நிதின் ராவத் கடிதம்

கிராம பஞ்சாயத்து தலைவரை தரையில் அமர வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு, மந்திரி நிதின் ராவத் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2020-10-16 02:10 GMT
மும்பை,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம பஞ்சாயத்து கூட்டத்தின் போது, ஆதிதிராவிட சமூகத்தை சோ்ந்த தெற்கு திட்டை கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு மராட்டிய மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவருமான நிதின் ராவத் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில், “‘தென்மாநிலத்தில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட தலித் சமூகத்தை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவர் அவமானப்படுத்தப்பட்டதால் வேதனையும், ஆத்திரமும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் கிராம பஞ்சாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டு முக்கிய குற்றவாளி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்க வன்கொடுமை சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்