அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு தி.மு.க. இளைஞர், மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்

அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு தி.மு.க. இளைஞர், மாணவர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-10-16 04:50 GMT
கருப்பூர்,

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ‘சீர்மிகு கல்வி நிறுவனம்’ என்ற அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்து பெறுவதில் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது. ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அந்த சிறப்பு அந்தஸ்தை எப்படியாது பெற்றே தீருவது என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்டம், சேலம் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் ஆகியவை இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்.

மாணவர்கள் நலனை பாதிக்கும் வகையில் இட ஒதுக்கீட்டை பறிக்காதே, அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லாதே போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அன்பரசன், மேற்கு மாவட்ட இளைஞர் அணி மணிகண்டன், மாநகர இளைஞர் அணி சரவணன், மாவட்ட மாணவர் அணி அருண் பிரசன்னா, மேற்கு மாவட்டம் கண்ணன், மாநகர மாணவர் அணி பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்