குன்னம் அருகே அடகுக்கடையில் 50 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

குன்னம் அருகே அடகுக்கடையில் 50 பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-10-16 05:32 GMT
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 49). இவர் வேப்பூர் பஸ் நிலையம் அருகே நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் காலை 10 மணிக்கு கடையை திறந்து இரவு 8 மணிக்கு மூடி விடுவது வழக்கம். அதேபோல, நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டும், அறுக்கப்பட்டும் கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், உதவி போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சாவித்திரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடையின் உள் அறையில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் வேப்பூர் கிராம தெருக்களில் ஓடிச்சென்று மீண்டும் கடையின் அருகில் வந்து படுத்துக் கொண்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

வேப்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த 20 நாட்களாக எரியாததால் அதனை பயன்படுத்தி இரவு நேரத்தில் மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர். ஆகவே, இந்த உயர் கோபுரமின்விளக்குகளை எரியச்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்