திருமயத்தில் 90 ஆண்டுகள் பழமையான தர்ம கிணறுகள் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தன

திருமயத்தில் 90 ஆண்டுகள் பழமையான தர்ம கிணறுகள் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தன.

Update: 2020-10-16 05:54 GMT
திருமயம்,

திருமயத்தில் 12 தர்ம கிணறுகள் உள்ளன. பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த 1928-ம் ஆண்டு அரசு சார்பில் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் கிணறுகளில் வாளி மூலம் கயிறு கட்டி தண்ணீர் இரைத்து பயன்படுத்தி வந்தனர்.

காலப்போக்கில் தொடர் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணற்றில் தண்ணீர் வற்றியது.

இதனையடுத்து அறிவியல் வளர்ச்சி காரணமாக நவீன முறையில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. உடல் உழைப்பு இல்லாமல் எளிதாக தண்ணீர் கிடைத்ததால் 12 தர்ம கிணறுகளிலும் மக்கள் நீர் எடுப்பதை தவிர்க்க தொடங்கினர். இதனால் கிணறுகள் குப்பை தொட்டிகளாக மாறியது. இதனால் வறண்டு போன கிணறுகளில் நீரின்றி குப்பைகளே நிறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் ஊராட்சி மூலம் தர்ம கிணறுகளை சுத்தம் செய்து மக்களுக்கு குடிநீர் வழங்க முடிவு செய்தனர். இதனையடுத்து 90 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கிணறுகள் தூர்வாரப்பட்டது. குறிப்பாக திருமயம் பாப்பாவயல், சந்தப்பேட்டை பகுதியில் உள்ள 4 கிணறுகள் ஊராட்சி பொது நிதியில் இருந்து சுமார் 100 அடி ஆழத்திற்கு தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் தூர்வரப்பட்ட தர்ம கிணறுகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடையே ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமயம் பாப்பாவயல் பகுதியில் உள்ள தர்ம கிணற்றில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்