நடிகர் சுஷாந்த் சிங்- திஷா சாலியன் தற்கொலையில் பொய் செய்தி பரப்பியதாக டெல்லி வக்கீல் கைது

நடிகர் சுஷாந்த் சிங்- திஷா சாலியன் தற்கொலை தொடர்பாக பொய் செய்தி பரப்பியதாக டெல்லி வக்கீலை மும்பை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-16 20:58 GMT
மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(வயது34) கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சில நாட்களுக்கு முன் அவரது முன்னாள் பெண் மேலாளரான திஷா சாலியன் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் சுஷாந்த் சிங் மற்றும் திஷா சாலியன் தற்கொலைகளை தொடர்பு படுத்தியும், இந்த மரணங்களுடன் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரேயை தொடர்புபடுத்தியும் டெல்லியை சேர்ந்த வக்கீல் விபோர் ஆனந்த் யு-டியூப்பில் பொய் தகவல்களை பரப்பினார். அவர் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

கைது

இந்தநிலையில் அதிரடி நடவடிக்கையாக நேற்று வக்கீல் விபோர் ஆனந்தை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவதூறு பரப்பியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மும்பை இணை போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) மிலிந்த் பராம்பே கூறினார். கைதான வக்கீல் விபோர் ஆனந்த் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 19-ந் தேதி வரை போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்