தமிழகத்தோடு புதுச்சேரி இணைப்பு இல்லை பா.ஜ.க. திட்டவட்டம்

தமிழகத்தோடு புதுச்சேரி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பா.ஜ.க. தெரிவித்தது.

Update: 2020-10-16 22:34 GMT
புதுச்சேரி,

புதுவையில் பா.ஜ.க.வை மக்கள் விரும்புவதால் பலர் வந்து சேருகிறார்கள். இதுதவிர பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் தொடர்பில் உள்ளனர். தொடர்ந்து நாங்கள் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும். கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்களை காக்க ஆளும் காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. அதை மறைப்பதற்காக காங்கிரசார் ஏதேதோ பேசி வருகிறார்கள்.

தமிழகத்தோடு புதுச்சேரி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. புதுவையில் இப்போது இருக்கும் நிலைமை அப்படியே தொடரும். ஆனால் எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

கொரோனா காலத்தில் 80 கோடி மக்கள் மத்திய அரசின் இலவச அரிசியை பெற்று பயனடைந்துள்ளனர். நாங்கள் ரேஷன் கடைகளை திறக்க தயாராக உள்ளோம். கவர்னர் அலுவலகத்தை கட்சி நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயன்படுத்துவதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்பவர்களுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

இவ்வாறு தேசிய செயலாளர் ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

கிலோ ரூ.3-க்கு அரிசி

புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘புதுவையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததும் ரேஷன்கடைகளை திறப்போம். கிலோ ரூ.2-க்கு கோதுமையும், ரூ.3-க்கு அரிசியும் வழங்குவோம். இந்த ஆட்சியில் இலவச அரிசி கொள்முதலில் ஊழல் நடந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. அதனால்தான் நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது’ என்றார்.

முன்னதாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ரவி எம்.எல்.ஏ. ஆலோசனை மேற்கொண்டார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர், பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், நிர்வாகிகள் முதலியார்பேட்டை செல்வம், தங்க.விக்ரமன், அகிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்