“தினத்தந்தி” செய்தி எதிரொலி தாணிப்பாறை ராம்நகரில் கலெக்டர் ஆய்வு - மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதாக உறுதி

“தினத்தந்தி“ செய்தி எதிரொலியால் தாணிப்பாறை ராம்நகரில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

Update: 2020-10-17 04:57 GMT
வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான தாணிப்பாறை, பட்டுப்பூச்சி, அத்தி கோவில், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் ராம்கோ நிறுவனம் மூலம் ராஜபாளையத்தில் கட்டப்பட்டுள்ள மலைவாழ் பழங்குடியினர் மாணவ விடுதியில் தங்கி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். மேலும் கல்லூரி படிப்பையையும் தொடர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தாணிப்பாறை ராம்கோ நகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் 50-க்கும் மேற்பட்டோர் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து விட்டனர். தற்போது இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு செல்போன் கோபுரம் வசதி இல்லாததால் இந்த மாணவர்கள் கல்வி பயில சிரமப்பட்டு வந்தனர். எனவே ராம்நகரில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என “தினத்தந்தி”யில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை ராம்நகர் பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தடையில்லாமல் கல்வி பயில மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஆன்லைன் வகுப்பை தொடர்வதற்கு உண்டான சிக்னல் வசதிகளையும் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்