நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக அளவில் நாமக்கல் பயிற்சி மைய மாணவர் முதலிடம்

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தமிழக அளவில் நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மைய மாணவர் ஸ்ரீஜன் முதலிடத்தையும், மாணவி மோகனபிரபா 2-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

Update: 2020-10-17 05:33 GMT
நாமக்கல்,

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2020-21-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட் தேர்வு) கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

இதில் நாமக்கல் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையத்தில் படித்த திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்தார். இவர் இந்திய அளவில் 8-வது இடத்தையும், ஓ.பி.சி. பிரிவில் இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை குறித்து மாணவர் ஸ்ரீஜன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நான் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 380 மதிப்பெண்கள் பெற்றேன். இந்த ஆண்டில் 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்று உள்ளேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் புதுச்சேரி ஜிப்மரில் சேர்ந்து படிக்க உள்ளேன். எதிர்காலத்தில் இதயநோய் நிபுணராகி சேவை செய்ய விரும்புகிறேன்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து தான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே அதில் கூடுதல் பயிற்சி மேற்கொள்வது அதிக மதிப்பெண்கள் பெற ஏதுவாக இருக்கும். பாடங்களை நன்கு புரிந்து, விருப்பத்துடன் படித்தால் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இந்த பயிற்சி மையத்தில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் அளித்தனர். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கொடுத்த ஊக்கம் எனது சாதனைக்கு உறுதுணையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இவரது தந்தை ராஜவேல் நூற்பாலை நடத்தி வருகிறார். தாயார் கனிமொழி இல்லத்தரசி. இவருக்கு அகிலேஷ் என்ற தம்பி உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதே பயிற்சி மையத்தில் படித்த மாணவி மோகனபிரபா 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 52-வது இடத்தையும், தமிழக அளவில் 2-வது இடத்தையும் பிடித்து உள்ளார். நாமக்கல்லை சேர்ந்த இவர் இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனை குறித்து மாணவி மோகனபிரபா கூறியதாவது:-

நீட் தேர்வு எழுதிய முதல் முறையிலேயே மாநில அளவில் 2-வது இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் எதிர்காலத்தில் நரம்பியல் நிபுணராகி சேவை செய்ய உள்ளேன். அந்த துறையில் போதிய டாக்டர்கள் இல்லை. எனவே நரம்பியல் துறையில் சேவை செய்ய விரும்புகிறேன். இந்த பயிற்சி மையத்தில் அடிக்கடி தேர்வுகள் நடத்தி எனக்கு பயிற்சி அளித்தனர். அது எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மாணவியின் தந்தை ரவிச்சந்திரன், தாயார் சுமித்ரா ஆகிய இருவரும் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் ஸ்ரீஜன், 2-வது இடம் பிடித்த மாணவி மோகனபிரபா ஆகிய இருவரையும் பயிற்சி மையத்தின் தலைவர் சரவணன் மற்றும் இயக்குனர்கள் குணசேகரன், குருவாயூரப்பன், சுப்பிரமணியன், மோகன் ஆகியோர் பாராட்டி, சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

மேலும் செய்திகள்