காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு: போலீஸ் துறையை, அரசு தவறாக பயன்படுத்துகிறது - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு

காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து நெருக்கடி கொடுப்பதாகவும், போலீஸ் துறையை அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெங்களூருவில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

Update: 2020-10-17 21:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேசுவரிநகர் சட்டசபை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குசுமா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. குசுமா வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது நானும், அவரது தந்தையும் உடன் சென்றோம். டி.கே.சிவக்குமார் வருவதாக சொன்னதால், அவருக்காக நான், குசுமா, அவரது தந்தை ஆகியோர் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பாக காரில் காத்திருந்தோம். அதில் என்ன தவறு இருக்கிறது.

ஆனால் விதிமுறையை மீறியதாக குசுமா மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது பெயர் இடம் பெறவில்லை. எனது பெயரை குறிப்பிடாமல், ஒரு அடையாளம் தெரியாத நபர் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நான் எதிர்க்கட்சி தலைவர். நான் ஒரு அடையாளம் தெரியாத நபரா? என்பதை போலீசார் விளக்க வேண்டும்.

ராஜராஜேசுவரிநகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் குசுமாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. குசுமாவுக்கு தொல்லை கொடுக்க வேண்டும், அவரை மனரீதியாக தொல்லைபடுத்த வேண்டும் என்பதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் துறையை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதனை மாநில மக்கள் சகித்து கொண்டு இருக்க மாட்டார்கள்.

நான், குசுமா உள்ளிட்டோர் காலையில் 11.45 மணியளவில் தான் வேட்பு மனு தாக்கல் செய்ய ராஜராஜேசுவரிநகர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றோம்.

ஆனால் காலை 11.15 மணியளவிலேயே குசுமா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் வரும் முன்பாக போலீசில் புகார் கொடுத்த தேர்தல் அதிகாரி யார்?, எதற்காக முன்கூட்டியே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்