பெரம்பலூர் அருகே பரிதாபம்: குலதெய்வ கோவிலுக்கு சென்ற ஆசிரியர் மகன் தலையில் கல் விழுந்து பலி

பெரம்பலூர் அருகே குலதெய்வ கோவிலுக்கு சென்ற ஆசிரியர் மகன் தலையில் கல் விழுந்து பரிதாபமாக இறந்தான்.

Update: 2020-10-18 11:00 GMT
பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, சமயபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் முசிறி தாலுகா கண்ணுக்குளத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனோஜ்(வயது 16), ஹரி(12) என 2 மகன்கள்.

நேற்று முன்தினம் மாலை சிவக்குமார் தனது 2 மகன்கள் மற்றும் நண்பர்களுடன் பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தில் உள்ள தங்களது குல தெய்வமான செல்லாயி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இந்த கோவில் பழமையானது ஆகும். அவர்கள் செல்லாயி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, எதிரே உள்ள கங்காயி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

அப்போது மனோஜ், கோவிலின் மேலே இருந்த கல்லை பிடித்து ஆட்டியதில், கல் அவர் தலையில் விழுந்தது. இதில் அவன் படுகாயமடைந்தான். இதைக்கண்ட மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவனை சிவக்குமார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் மனோஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குலதெய்வ கோவிலுக்கு சென்ற சிறுவன், தலையில் கல் விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்