விவசாயி வீட்டில் 9 பவுன் நகை- பணம் திருட்டு கோவிலுக்கு சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை

வேப்பந்தட்டை அருகே கோவிலுக்கு சென்ற நேரத்தில் விவசாயி வீட்டில் 9 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2020-10-18 11:15 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூர் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நல்லான்(வயது 74). இவரது மனைவி பாக்கியம்(68). இவர்கள் இருவரும் தங்களது வயலிலேயே ஓட்டு வீடு அமைத்து குடியிருந்து கொண்டு, விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் ஊருக்குள் இருக்கும் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நல்லானும், பாக்கியமும் மாலை 6 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதற்குள் இருந்த 4 பவுன் தாலிச்சங்கிலி, 5 பவுன் தங்கச்சங்கிலி என மொத்தம் 9 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து நல்லான், கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை சேகரித்தனர்.

போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்று சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்