தானேயில் காணாமல் போன தணிக்கையாளர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு

தானேயில் காணாமல் போன தணிக்கையாளர் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2020-10-18 20:27 GMT
தானே,

தானேயை சேர்ந்தவர் சாகர் தேஷ்பாண்டே(வயது38). தணிக்கையாளரான இவர், கடந்த 11-ந்தேதி டிட்வாலா சென்றுவிட்டு வருவதாக வீட்டில் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார். இதன்பின் மாலை வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குடும்பத்தினர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

இந்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் மறுநாள் டிட்வாலா-காதிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தையொட்டி ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடல் மீட்பு

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், பிணமாக மீட்கப்பட்டவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட சாகர் தேஷ்பாண்டே என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது அங்கு நடந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் சாகர் தேஷ்பாண்டேக்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர் என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்