ராயபுரத்தில் பயங்கரம்: குடும்பத் தகராறில் துப்பாக்கியால் சுட்ட ஓட்டல் அதிபர் - உறவினர் காயம்

ராயபுரத்தில் குடும்பத்தகராறில் ஓட்டல் அதிபர் துப்பாக்கியால் சுட்டதில் உறவினர் காயம் அடைந்தார்.

Update: 2020-10-18 23:41 GMT
திருவொற்றியூர், 

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் சையது இப்ராகிம் ஷா (வயது 57). இவருடைய மனைவி பரகத்துண்ணிஷா (47). இவர்கள் ராயபுரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் வசித்து வருகின்றனர். சையது இப்ராகிம் ஷா, பாரிமுனை அங்கமுத்து தெருவில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனால் சையது இப்ராகிம் ஷா-பரகத்துண்ணிஷா இருவர் மட்டும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகின்றனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

பரகத்துண்ணிஷாவுக்கு அவரது அக்காள் நஸியத்நிஷாவின் மகன் அன்சாருதீன் (27) என்பவர் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் உதவியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சையது இப்ராகிம் ஷா, அன்சாருதீனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, “நீ ஏன் என் மனைவிக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறாய்?” என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அன்சாருதீனை, சையது இப்ராகிம் ஷா தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அன்சாருதீன், தனது நண்பர்கள் 3 பேருடன் சையது இப்ராகிம் ஷா வீட்டுக்கு இரவு 10.30 மணியளவில் சென்றார்.

அன்சாருதீனுடன் மணி என்பவர் மட்டும் 4-வது தளத்துக்கு சென்றார். மற்ற 2 பேரும் கீழ்தளத்தில் இருந்தனர். பரக்கதுண்ணிஷா வீட்டு கதவை திறந்து அன்சாருதீனை வீட்டுக்குள் வரவழைத்தார்.

இதனால் பயந்துபோன சையது இப்ராகிம் ஷா, குளியல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். அன்சாருதீன், குளியல் அறை கதவை தட்டி அவரை வெளியே வருமாறு கூறினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சையது இப்ராகிம் ஷா, தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பாதி கதவைத் திறந்த நிலையில் அன்சாரூதீனை துப்பாக்கியால் சுட்டார்.

அதை தடுக்க முயன்றபோது அன்சாருதீன், இடது உள்ளங்கையில் குண்டு துளைத்தது. துப்பாக்கி குண்டு சத்தம்கேட்டு பரக்கதுண்ணிஷா அலறினார். இதனால் பயந்துபோன அன்சாருதீனுடன் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சையது இப்ராகிம் ஷாவின் இடது கையிலும் காயம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் அந்த காயம், கண்ணாடித்துண்டு சிராய்ப்புகளால் ஏற்பட்டதா? அல்லது துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை.

குண்டடிப்பட்ட காயத்துடன் அன்சாருதீன், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சையத் இப்ராகிம் ஷா, கையில் ஏற்பட்ட காயத்துக்கு தேனாம்பேட்டை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடந்தபோது அன்சாருதீனுடன் வந்த முகமது ஆசிப் என்பவர் மட்டும் மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வரும்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சையது இப்ராகிம் ஷா வீட்டில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 8 குண்டுகள், 2 வெடித்த தோட்டாக்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் விசாரணையில் சையத் இப்ராகிம் ஷா, அந்த கைத்துப்பாக்கிக்கு உரிமம் பெற்று இருப்பது தெரிந்தது. எனவே குடும்பத்தகராறில் ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் ராயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்