கூட்டுறவுத்துறை மூலம் பனை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்

கூட்டுறவுத்துறை மூலம் பனை பொருட்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தினார்.

Update: 2020-10-19 00:30 GMT
கோவில்பட்டி,


பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில், தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட உள்ளன. பனை மரமானது தமிழக அரசின் மரமாக சிறப்புற்று விளங்குகிறது. ஆனாலும் அதனை பாதுகாக்காததால் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தில் 9 கோடி பனை மரங்கள் இருந்தன. ஆனால் தற்போது அதில் பாதியளவு கூட இல்லை.

பனை மரங்கள் மூலமாக போதிய வருமானம் கிடைக்காததால், அவைகளை அழிக்கின்றனர். எனவே பனை பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பனைவாரியமும் சிறப்பாக செயல்பட வேண்டும். கேரள மாநிலத்தில் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதித்துள்ளதால், அவற்றை விவசாயிகள் குத்தகைக்கு விட்டு வருமானம் ஈட்டுகின்றனர். இதேபோன்று தென்னை மரங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி

ஆனால் தமிழகத்தில் தலைகீழான நிலைமையே உள்ளது. தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்குவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதித்ததால், அவைகள் பாதுகாக்கப்படுகின்றன. இதேபோன்று பனை மரங்களில் இருந்தும் கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். பனை மரங்கள் அழிக்கப்படுவதால்தான் சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறது.

அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதால், அ.தி.மு.க. கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக பெருந்தலைவர் மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் முக்கிய பங்காற்றும். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்