தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் வெடித்ததால் பரபரப்பு - கைக்குழந்தைகளுடன் பெண்கள் அலறியடித்து ஓட்டம்

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் வெடித்ததால் கைக்குழந்தைகளுடன் பெண்கள் அலறியடித்து ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-19 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளது. இங்கு தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசவத்திற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரிவில் ஆக்சிஜன் வாயு குழாய் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. நேற்று பிற்பகல் ஆக்சிஜன் குழாயில் இருந்து திடீரென சத்தம் கேட்டது. உடனே மருத்துவ பணியாளர்கள் விரைந்து சென்று பார்த்தபோது ஆக்சிஜன் குழாய் வெடித்து ஆக்சிஜன் வாயு வெளிவந்தது தெரிய வந்தது.

இதை பார்த்தவுடன் தீ விபத்து ஏற்பட்டு விட்டதோ? என அறையில் தங்கியிருந்த பிரசவமான பெண்கள், கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அவர்களுடன் இருந்த பெற்றோர், உறவினர்களும் அங்கிருந்து வெளியேறினர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வு எடுத்த பெண்களும் மிகவும் சிரமப்பட்டு அங்கிருந்து வெளியே வந்தனர். ஆக்சிஜன் வாயு தான் வெளியேறுகிறது என பணியாளர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்காமல் பதற்றத்துடன் அனைவரும் வெளியே வந்தனர்.

பின்னர் தொழில்நுட்ப அலுவலர்கள் சென்று குழாயை சரி செய்து ஆக்சிஜன் வாயு வெளியேறாமல் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் உஷாதேவி கூறும்போது, ஆக்சிஜன் குழாயை யாராவது அழுத்தி இருப்பார்கள். இதனால் குழாய் வெடித்து வாயு வெளியேறி இருக்கலாம். உடனடியாக அதை சரி செய்துவிட்டோம். எந்த பிரச்சினையும் இல்லை என ஒலி பெருக்கி மூலம் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்