விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு நரிக்குறவர்கள் திடீர் மறியல் - கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்த கலெக்டர்

விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு நரிக்குறவர்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது கோரிக்கையை கலெக்டர் உடனடியாக தீர்த்து வைத்தார்.

Update: 2020-10-19 22:15 GMT
திருச்சி,

திருச்சி அருகே உள்ளது தேவராயநேரி. இங்கு வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள், கலெக்டரை சந்தித்து ஏரி பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அவர்கள் போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அலுவலகத்திலிருந்து தனது இல்லம் செல்வதற்காக காரில் வெளியே வந்தார். அப்போது, நரிக்குறவர்களின் போராட்டத்தை கவனித்த கலெக்டர், தனது காரை நிறுத்தும்படி கூறினார். பின்னர் காரிலிருந்து இறங்கி வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கோரிக்கை என்ன? என்று அவர் கேட்டார்.

அதற்கு அவர்கள், திருச்சி மாவட்ட கலெக்டராக மலையப்பன் இருந்தபோது எங்களுக்கு தேவராயநேரி ஏரியில் விவசாயம் செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என நிலம் ஒதுக்கினார். அதில் நாங்கள் இப்போது விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இந்த நிலத்தை சிலர் அபகரிக்க நினைக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து விட்டார்கள். மேலும் நாங்கள் விவசாயம் செய்யும் இடத்திற்கு தண்ணீரை வரவிடாமல் அதிகாரிகளின் துணையோடு அடைத்து வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு இப்போது ஊசி, பாசி, மணி மாலை விற்பனை மூலம் வருமானம் இல்லை. வாழ்வாதாரத்தை இழந்து தவிர்ப்பதால் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். அதையும் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா என்று கூறினார்கள். சிலர் தங்களுக்கு பட்டா வேண்டும் எனக்கேட்டார்கள்.

அதற்கு கலெக்டர், ஏரி புறம்போக்கு இடத்தில் நீங்கள் எத்தனை ஆண்டுகள் குடி இருந்தாலும், அதற்கு அரசாங்கம் பட்டா வழங்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. ஆதலால் உங்கள் விவசாய நிலத்தை குத்தகைக்கு விடாமல் நீங்களே சாகுபடி செய்து கொள்ளுங்கள். குத்தகைக்கு விட்டால் சட்டப்பிரச்சினை வரும். நீங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து உங்களை யாரும் காலிசெய்ய சொல்ல மாட்டார்கள் என்றார்.

அத்துடன், உங்களது பாசனப்பகுதிக்கு தண்ணீர் கிடைப்பதற்கு உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் என்றும் கலெக்டர் கூறினார். இதனை தொடர்ந்து நரிக்குறவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்