நிலத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி குடும்பத்துடன் விவசாயிகள் தர்ணா - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நிலத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றக்கோரி விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-19 22:15 GMT
விழுப்புரம்,

விக்கிரவாண்டி தாலுகா ராதாபுரம் புதுநகரை சேர்ந்தகணேசன், பாரிவள்ளல் உள்ளிட்ட விவசாயிகளுக்கு சொந்தமாக கட்டப்பட்டு பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்யாமல் இருக்கிற நிலையில் நிலத்திற்கு செல்லும் பொது வழிப்பாதையை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், ஆக்கிரமித்துக்கொண்டதோடு நிலத்திற்கு செல்லும் பாதையில் தடையை ஏற்படுத்தி வருகின்றார். இதனால் கணேசன், பாரிவள்ளல் உள்ளிட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலத்திற்கு சென்று பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுபற்றி அவர்கள் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை முறையிட்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த கணேசன், பாரிவள்ளல் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்கள் நிலத்திற்கு செல்லக்கூடிய பாதையை ஆக்கிரமித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து வழிப்பாதை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் இதுபற்றி கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்