கொரோனாவால் வேலையிழந்த மாற்றுத்திறனாளி தர்ணா - திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கொரோனாவால் வேலையிழந்த மாற்றுத்திறனாளி வேலைகேட்டு, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-20 06:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வீரலபட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 29). மாற்றுத்திறனாளி. இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பையுடன் வந்தார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி, பையை சோதனையிட்டனர். அதில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் இருந்ததை போலீசார் பார்த்தனர்.

இதையடுத்து மண்எண்ணெய் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் புகார் பெட்டியில் மனுவை போட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், போலீசார் அவரை சமரசம் செய்து தர்ணாவை கைவிட வைத்தனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதற்காக அவரை போலீசார் அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அவர் கொடுத்த மனுவில், எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஒரு தனியார் நிறுவனத்தில் நான் வேலை செய்தேன். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தற்போது வருமானமின்றி சிரமப்பட்டு வருகிறேன். மேலும் எனது கிராமத்துக்கு செல்ல பஸ் வசதி இல்லை. மருத்துவமனைக்கு கூட 3 கி.மீ. தூரம் நடந்து தான் செல்ல வேண்டும். நான் மாற்றுத்திறனாளி என்பதால் சிரமமாக உள்ளது. எனவே, எனக்கு வேலை வழங்குவதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்