அனுமதி பெறாத மனைகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்

அனுமதி பெறாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது என தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-20 23:54 GMT
தென்காசி,

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட மலையிட பாதுகாப்பு குழும பகுதியில் அமைந்துள்ள அனுமதி இல்லாத மனை மற்றும் மனைப்பிரிவுகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அரசாணையின்படி வரன்முறை செய்திட www.tnl-ay-out-h-i-l-l-a-r-e-a-r-eg.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து உரிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அணுகி பொதுமக்கள் வரன்முறை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அனுமதி பெறப்படாத மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்தப்படாத நிலையில் இவற்றிற்கு மின்சாரம், தண்ணீர், வடிகால் மற்றும் கழிவுநீர் போக்கும் இணைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீட்டித்து வழங்கப்பட மாட்டாது.

மேலும் பதிவுத்துறை மூலமாக பதிவு செய்யப்பட மாட்டாது. இதில் அமையப்பெறும் கட்டிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களால் கட்டிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.

கடைசி நாள்

இவற்றை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-9-2021 என்பதால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களது அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவினை வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்