தட்டார்மடம் வியாபாரி கொலை: கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேலும் ஒருவர் சிக்குகிறார்

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் கைதானவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்குகிறார்.

Update: 2020-10-21 00:01 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரியான இவர் நிலத்தகராறு காரணமாக காரில் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், உறவினர்கள் முத்துராமலிங்கம், சின்னத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த கொலையில் பேச்சி, கருப்பசாமி ஆகிய 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

பேச்சி, கருப்பசாமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். 2 பேரையும் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து பேச்சி, கருப்பசாமி ஆகியோர் நேற்று தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கருப்பசாமிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் ஒருவருக்கு தொடர்பு

பின்னர் பேச்சியை மட்டும் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம், இந்த கொலைக்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா?, வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளனரா? என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். பேச்சி, கருப்பசாமி ஆகியோர் இன்று (புதன்கிழமை) கோவில்பட்டி கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

மேலும் செய்திகள்